Share via:
தமிழகத்தில் இந்த முறை பிரதமர் நரேந்திரமோடி ராமநாதபுரம் தொகுதியில்
போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் வாரணாசி
தொகுதியில் பிரதமர் மோடி நிற்பதாக முதல் பட்டியலை மத்திய பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை
பா.ஜ.க. பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் பட்டியலை வெளியிட்டார்.
இதில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களில்
28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உத்தர பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில்
24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தெலங்கானாவில்
9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல பிரதேசத்தில்
2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில்
மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா–காந்தி நகர் (குஜராத்),
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்- லக்னோ (உத்தர பிரதேசம்), முன்னாள் முதல்வர் சிவராஜ்
சிங் சவுகான்–விதிஷா (மத்திய பிரதேசம்), திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லவ் தேவ்–திரிபுரா
மேற்கு, மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா–குணா ( மத்திய பிரதேசம்), மத்திய அமைச்சர்
ஸ்மிருதி இரானி–அமேதி (உத்தர பிரதேசம்), மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா–போர்பந்தர்
(குஜராத்), மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு–அருணாச்சல் கிழக்கு, மத்திய அமைச்சர் சர்வானந்த
சோனோவால்–திப்ருகார் (அசாம்), மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் – உதம்பூர் (காஷ்மீர்),
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்–பிகானீர் (ராஜஸ்தான்), மத்திய அமைச்சர் பூபேந்திர்
யாதவ்–அல்வார் (ராஜஸ்தான்), மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்–ஜோத்பூர் (ராஜஸ்தான்),
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா – கோட்டா (ராஜஸ்தான்), நடிகை ஹேமமாலினி – மதுரா (உத்தர
பிரதேசம்), நடிகர் ரவி கிஷண்- கோரக்பூர் (உத்தர பிரதேசம்), போஜ்புரி நடிகர் தினேஷ்
லால் யாதவ்–அசம்கர் (உத்தர பிரதேசம்) பின்னணி பாடகர் மனோஜ் திவாரி- டெல்லி வடகிழக்கு,
நடிகை லாக்கெட் சாட்டர்ஜி–ஹூக்ளி (மேற்குவங்கம்), மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா
ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ்- புதுடெல்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
மத்திய அமைச்சர்களில் 34 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான
பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபியும் ஆற்றிங்கல்லில்
மத்திய அமைச்சர் முரளிதரன், திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வரும் 10-ம் தேதி இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், 21-ம்தேதி
இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகக்கூடும் என தெரிகிறது. இன்னமும் தமிழகத்தில்
பா.ஜ.க.வுக்கு கூட்டணி முடிவாகவில்லை என்பதால், வேட்பாளர் பட்டியல் தாமதமாகும் என்றே
தெரிகிறது.