News

அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு செம வெற்றி… நீதிமன்றம் சொன்னது என்ன?

Follow Us

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் அடிப்படையில், 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நாட்டின் முதலாவது விரைவு ஈனுலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஈனுலையை திறந்து வைத்த பிரதமர், ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டதையும் பார்வையிட்டார். அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார். அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

இந்த விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட 3ம் தலைமுறை உலை ஆகும். அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் மூடுவதை உறுதி செய்யும் செயல் திறன் மிக்க பாதுகாப்பு அம்சங்கள் இங்கு உள்ளன. அணுக்கழிவுகள் உருவாக்கமும் இதில் கணிசமான குறையும். இதனால், பெரிய அளவிலான அகற்றல் வசதிகள் தேவை இல்லை. இந்த ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் விரைவு ஈனுலை கொண்ட 2வது நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பாக்கம் விழாவை அடுத்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தாமரை’ மாநாட்டில் பங்கேற்பதற்ற பிரதமர் மோடி ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.

’’எனக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான் இதற்கு காரணம். வளர்ந்த பாரதத்துடன், வளர்ந்த தமிழகமும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சென்னையில் பல ஆயிரம் கோடி மதிப்பில் நகர்ப்புற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட தமிழகத்தின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது.

ஆனால், மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு,சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களது கனவுகளை கண்டுகொள்ளவே இல்லை. புயல் வந்தபோது, அவர்களுக்கு உதவிசெய்வதற்கு பதிலாக துயரங்களையே திமுக அரசு அதிகப்படுத்தியது. திமுகவினர் வெள்ள மேலாண்மைக்கு பதிலாக ஊடக மேலாண்மை செய்தனர். தமிழக மக்கள், தமிழகம் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை

நலத்திட்டங்களுக்கான தொகையை மத்திய அரசு நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்புகிறது. பல லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு சென்றடைகிறது. இந்த பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் சிக்கல். இந்த விஷயத்தில் மொத்த குடும்பமும் பயங்கர எரிச்சலில் இருக்கிறது. உங்கள் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அளிக்கப்படும் பணத்தையாரும் பறிக்க மோடி ஒருபோதும்விடமாட்டான். நீங்கள் ஏற்கெனவேஎடுத்த பணமும் திரும்ப வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம்

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், குடும்ப வளர்ச்சிக்கே முன்னுரிமை தருகின்றன. மோடி சொல்வது, தேசத்துக்கே முன்னுரிமை. இதனால்தான் இண்டியா கூட்டணிகட்சியினர் என்னை வசைபாடுகின்றனர். ஆதரவற்றவர்கள், ஏழைகள் எல்லோருக்கும் சொந்தமானவன் இந்த மோடி. இந்த பாரதமே என் குடும்பம். அதனால்தான் இன்று தேசம் முழுவதும், ‘‘நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன்’’ என்று ஒரே குரலில் கூறுகிறது.

எனது உரையை முடிக்கும் முன்பாக, என் மனதை அரிக்கும் முக்கியமான கவலையை பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவது என் மனதை வலிக்கச் செய்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி தரும் உத்தரவாதம்.

வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு உருவானால்தான், வளர்ச்சி அடைந்த பாரதம் வலுப்படும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம்’’ என்று பிரதமர்  உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களான த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன், காமராஜர் மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி. தினகரனும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link