Share via:
அண்ணா தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் எப்படியாவது கூட்டணி சேர்த்துவிட
வேண்டும் என்று அ.தி.மு.க.வில் சிலரே முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில்
வேலுமணி முதன்மையானவர் என்று சொல்லப்படும் நிலையில், முதன்முதலாக வேலுமணி இதுகுறித்து
வாய் திறந்து பேசியிருக்கிறார்.
எஸ்.பி.வேலுமணி இது குறித்து, ‘’தற்போதைய அரசியல் சூழலில்சமூக
வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன. இதற்காக திமுக மற்றும்
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பாராட்ட வேண்டும். இல்லாததை இருப்பதைப் போலவும், இருப்பதை
இல்லாதது போலவும் அவர்கள் காண்பிக்கின்றனர்.
திமுக – அதிமுக எப்போதும் ஒன்றுசேராது. அதேபோல, காங்கிரஸ் – பா.ஜ.க.
ஒன்று சேராது. எனவே, இதுகுறித்து எதற்கு பேச வேண்டும்? ஆனால், இதுபோல பேசவைப்பதற்காக
சிலர் முயற்சிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த
30 ஆண்டுகளாக நான் ரத்த தானம் செய்து வருகிறேன். என்னைப் பற்றியும், முன்னாள் அமைச்சர்
தங்கமணி பற்றியும் சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்புகின்றனர்.
அதிமுக எங்களின் தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்குத்தான் வருவார்கள்.
யாரும் வெளியே போக மாட்டார்கள். சுமார் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக, உலக அளவில்
7-ம் இடத்தில் உள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களை எம்எல்ஏவாக, அமைச்சர்களாக உயர்த்தி
அழகு பார்த்தவர் ஜெயலலிதா. இப்படி இருக்கையில், வெறும் 3, 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள
பாஜகவில் நாங்கள் ஏன் சேரப் போகிறோம்? இதுபோன்ற வதந்திக்கெல்லாம் பதில் கூற வேண்டுமா?
அதிமுக 35 முதல்40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சியாகும்…’’ என்று பேசி இருக்கிறார்.
இத்தனை தூரம் வேலுமணி பேசிய பிறகும் அவர் இன்னமும் வானதி சீனிவாசன்
மற்றும் பியூஸ் கோயல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எந்த நேரமும் பல்டி அடிப்பார்
என்றும் சொல்வதுதான் ஆச்சர்யம்.