Share via:
தேர்தல் காலத்தில் அமலாக்கத்துறை அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட
நிலையில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் குறி வைக்கும் வகையில் இன்று
ரெய்டு ஆரம்பமாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக 7 ஆண்டுகளுக்கும்
மேல் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும்,
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
சமீபகாலமாக கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்காமல அமைதியாகவே
இருந்துவருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கர்
வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மூன்று வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆவணங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.
குட்கா முறைகேடு, இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே அமலாக்கத் துறையினர்,
வருமான வரித்துறையினர், தமிழக ஊழல் தடுப்பு துறையின் அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீடு,
அலுவலகம், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட
முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணை நடத்தப்பட இருக்கும் நிலையில் திடீர் ரெய்டு
நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 150 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு என்று குற்றம் சாட்டப்பட்ட
ஜி ஸ்கொயர் நிறுவனத்திலும் ரெய்டு நடக்கிறது.