Share via:
அரசுக்கு சொந்தமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, பதிவுத் துறையில்
பணியாற்றும் அதிகாரிகள் சிலரின் துணையோடு, தனி நபர்களுக்குப் பெயர் மாற்றம் செய்து
கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதாக அரசுக்கு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் உண்மைத்தன்மையைக்
கண்டறிய அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனி நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதா
என்பது குறித்தும், அதன் அடிப்படையில் அரசு நிலம் முறைகேடாக பதிவு செய்து ஆவணங்கள்
பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதோடு, முறைகேடான
பதிவுகள் இருப்பின் அதற்கு பொறுப்பாகியுள்ள பதிவுத் துறை மற்றும் பிற துறை சார்ந்த
அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து உண்மை நிலையைக்
கண்டறிந்து அரசுக்கு அறிக்கை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையிலான
ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அனுஷியா, சென்னை
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரஸ்வதி, வட்டாட்சியர் இராதாகிருஷ்ணன் ஆகியோர்
உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவானது நேரில் விசாரணை மேற்கொண்டு
30 நாட்களுக்குள் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.
மேலும், தென்சென்னை பரங்கிமலை கிராமத்தில் 36 சர்வே எண்களில்
கட்டுப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாகப்
பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தில் அரசு நிலத்தில் முறைகேடான பதிவுகள் நடந்துள்ளதா
என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை செய்வதற்கு வணிகவரித் துறை இணை ஆணையர் உமா மகேஸ்வரி
தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.எம்.ஆர்.எல். துணை ஆட்சியர்கள் த.முருகன்,
கே.இளங்கோவன் ஆகிய இருவரும் இந்த குழுவின் உறுப்பினராக இருப்பார்கள். இந்த குழுவும்
30 நாட்களுக்குள் தங்கள் அறிக்கையை அரசுக்கு வழங்க இருக்கிறது.
வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் நடைபெறும் ஊழல்களைக் கண்டறிய
அரசு அமைத்திருக்கும் இந்த விசாரணைக் கமிஷன் தில்லுமுல்லு பார்ட்டிகளை கையும் களவுமாகப்
பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை.