Share via:
விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து
சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த
13ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லி நோக்கி விவசாயிகள் செல்வதற்குத் தயாராகிறார்கள்.
பஞ்சாப் – ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள்
1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் குவிந்துள்ளனர். கடந்தமுறை டெல்லியை
நோக்கி விவசாயிகள் முன்னேற முயன்றபோது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில்
இந்தமுறை அதை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் சாக்குகளை தண்ணீரில் நனைத்து வைத்துள்ளனர்.
கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டால் அவற்றின் மீது போட்டு புகையை மட்டுப்படுத்த தயாராக
உள்ளனர். மேலும் டிராக்டர்களையே தங்குமிடம் போல் தயார் செய்தும் வைத்துள்ளனர். எப்படியாவது
டெல்லி நோக்கி முன்னேறிவிட வேண்டும் என்று அனைத்து முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்து
வருகின்றனர்.
இவற்றை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டுமென காவல்துறையும்,
துணை ராணுவப்படையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிக்ரி
மற்றும் சிங்கு எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு தடுப்பு
வேலிகள் அமைத்துள்ளனர். கான்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு
ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் இதற்கு அஞ்சாத விவசாயிகள், “அரசாங்கம் எங்களை கொலைகூட
செய்யட்டும். ஆனால் எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு
சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து பிரதமர் இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம்
ஒருபோதும் மன்னிக்காது. ஹரியாணா கிராமங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் செய்த குற்றம்தான் என்ன? உங்களை நாங்கள் பிரதமராக்கியதுதான் குற்றமா? எங்களை
பாதுகாப்புப் படைகள் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் அமைதியாக டெல்லியை நோக்கி முன்னேற
அனுமதியுங்கள். அது எங்களின் உரிமை” என்று கூறியுள்ளனர்.
விவசாயிகள் ஊர்வலத்தை முன்வைத்து
பெரும் கலவரம் வெடிக்க இருப்பதாக இப்போதே புரளி கிளம்பியுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சி
ஏற்படுத்தியுள்ளது