Share via:
தினமும் ஏதேனும் ஒரு
கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலுக்கு ஆதரவு
தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின்றன. அந்த வகையில் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ்
கட்சி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் விவகாரத்தில் நிறைய வில்லங்கம் வெளிவந்துள்ளன.
திருணாமுல் காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கலைவாணன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வருகிற நாடாளுமன்ற
தேர்தலுக்கு திருணாமுல் காங்கிரஸின் தமிழ் மாநில பிரிவு முழு ஆதரவை தெரிவிப்பதாக ஆதரவு
கடிதத்தை தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் வழங்கினார்.
இப்போது திருணாமுல் காங்கிரஸ் மாநில நிர்வாகியாக கலைவாணன் இல்லை,
அவரை கட்சியில் இருந்தே தூக்கிவிட்டார்கள் என்று ஆதாரம் காட்டிவருகிறார்கள். இதையடுத்தே,
தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
‘’இரட்டை இலையை சிலர் முடக்குவதாக கூறுகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றத்திலும்
முறையான தீர்ப்பு பெற்றிருக்கிறோம் இரட்டை இலையை யாரும் முடக்க முடியாது. ஓபிஎஸ் கொடியை
பயன்படுத்தினால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம். திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் கட்டணியில்
இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது.
அதேபோல் அதிமுகவிலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி உறுதியாகும். தற்போது கூட்டணிக்காக காத்திருப்பதாக
கூறுவது தவறு. எல்லோரும் கூட்டணி, கூட்டணி என்று இருக்கும்பொழுது நாங்கள் மட்டும் கூட்டணி
அமைக்க கூடாதா?
2019, 2021ல் எங்கள் தலைமையில் தான் கூட்டணி இருந்தது. தற்போதும்
நாங்கள் தான் கூட்டணியின் தலைமையாக இருப்போம். 2014ல் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளர்
யார் என சொல்லி ஓட்டு கேட்கவில்லை. எங்களை பொறுத்தவரை, தமிழ்நாட்டு மக்கள்தான் எங்கள்
எஜமானர்கள். முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பலர் பாஜவில் சேர்வது அவர்களுடைய
விருப்பம். இது ஜனநாயக நாடு. யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் பாஜவில்
இருந்தும் நிறைய பேர் அதிமுகவில் வந்து சேர்ந்துள்ளனர். பாஜவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு
இருப்பதாக கூறுவதில் ஓட்டு போடும் மக்கள் யாரும் கருத்து கணிப்புக்கு வரவில்லை.
அரசியல் வாரிசு என்பது சீட்டு கொடுப்பதால் மட்டும் கிடையாது.
தலைமைக்கு யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்து தான். அதைத்தான் அரசியல் வாரிசு என்று
சொல்கிறேன்…’’ என்று கூறினார்.
பா.ம.க. மீது அழுத்தமான நம்பிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதாம்.
இந்த தேர்தலில் கண்டிப்பாக உங்களுடன் இருப்போம் என்று ராமதாஸ் உறுதி அளித்ததாலே தெம்பாகப்
பேசுகிறார் என்கிறார்கள்.
பார்க்கலாம்.