Share via:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நிவாரண முகாம்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (நவம்பர் 27) வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளிப் புயலாக மாற உள்ளது. சவுதி அரேபியர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு பெங்கல் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த புயலானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இப்புயல் சென்னை, புதுச்சேரி இடையே அது கரையை கடக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (நவம்பர் 27) முதல் அதன்படி தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ள நீர் தேங்கும் பட்சத்தில் விவசாய நிலங்களில் சேதம் அடைவதை முன்கூட்டியே திட்டமிட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கக் கூடிய நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதே போல் மக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.