Share via:
அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம்
பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியானது.
அதாவது, அ.தி.மு.க.வின் பெயர், கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம்,
லெட்டர் பேடு ஆகியவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர்
பயன்படுத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்
என்று கூறிய பன்னீர்செல்வத்துக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.
ஆகவே, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம்
எழுதியிருக்கிறார். அதாவது, ‘அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிட அனுமதிக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக இதனை வழங்க வேண்டும். வேட்பாளர்,
சின்னத்தை அங்கீகரித்து கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும். அ.தி.மு.க.வின் இரு அணிகளையும்
பொதுச்சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
கூட்டணி பலம் இல்லாத எடப்பாடி பழனிசாமி தனி சின்னத்தில் நிற்க
நேர்ந்தால் நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெற முடியாது. பா.ஜ.க. கூட்டணியில் தன்னால்
அதிக வாக்குகள் பெற முடிந்தால், இதனை காட்டி அ.தி.மு.க.வையும் இரட்டை இலையையும் கைப்பற்ற
முடியும் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தி வருகிறார். இதற்கு பா.ஜ.க.வும் ஆதரவு வழங்கும்
என்றே தெரிகிறது.