Share via:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் முடிவில் 39 ஆண்டு கால வரலாறு மாறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட பாகிஸ்தான், இலங்கை அணிகளை அடித்து துவம்சம் செய்த இந்திய அணி 9வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ள மற்றொரு அணி எது என்பதற்கான விடை இன்று நடைபெற உள்ள இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டியில் தெரிந்துவிடும். பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், வங்காளதேசத்தை வீழ்த்தியதால் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. எனவே இன்றைய போட்டியில் வெற்ற பெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்ய உள்ளது.
இன்றைய ஆட்ட முடிவில் 39 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுமா என்று தெரிந்துவிடும். அதாவது இலங்கையை பாகிஸ்தான் அணி வீழத்தினால், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி 39 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் நேருக்கு நேராக மோதும் என்ற பெரிய ஆவலுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

