Share via:
தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
மீதான விவாதத்தின் போது, செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு 99% உழவர்கள் ஆதரவு என்று
அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது பொய் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி
ராமதாஸ்.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும்
கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட உழவர்களின் நிலங்கள் இதற்காக பறிக்கப்படவுள்ளன. இதைக் கண்டித்து 90% உழவர்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களைக் காக்க எந்த
தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இவற்றை மறைத்து நிலம் வழங்க அவர்கள் தயாராக இருப்பதாக
பொய்யுரைப்பது அமைச்சருக்கு அழகல்ல. மராட்டிய மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த
மாநில அரசு முயன்ற போது அதற்கு உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து உழவர்களின் கருத்தையறிய 2008-ஆம் ஆண்டில்
22 கிராமங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 6000 உழவர்கள் பங்கேற்ற பொதுவாக்கெடுப்பின்
முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதைத் தொடர்ந்து நிலம் எடுக்கும் முயற்சியிலிருந்து
மராட்டிய அரசும், ரிலையன்ஸ் நிறுவனமும் பின்வாங்கின. அது உழவர்களுக்கு கிடைத்த வெற்றியாகப்
பார்க்கப்பட்டது.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% உழவர்கள்
ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்று கூறும் அமைச்சர் வேலுவும், தமிழக அரசும் மராட்டிய
மாநிலத்தில் நடத்தப்பட்டதைப் போன்று செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள
நிலங்களின் உரிமையாளர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறை மூலம் விளை நிலங்களை கையகப்படுத்த தமிழக
அரசு முயன்றால், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
விவசாயிகளிடம் பொது வாக்கெடுப்பு
நடத்த அரசு தயாரா? செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள்
ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை
எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது பொய் என்றும் அன்புமணி
ராமதாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது