News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கட்சி ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் திருமாவளவன் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் வந்ததில்லை. அந்த நிலையில் இப்போது முதன்முறையாக பணத்துக்கு ஆசைப்பட்டு நேற்று கட்சிக்கு வந்த ஒரு நபருக்கு மிகப்பெரிய பதவியைக் கொடுத்து இத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் வன்னியரசுவை அவமானப்படுத்திவிட்டதாக நிர்வாகிகள் கொதிக்கிறார்கள்.

பணம் இருந்தால் சீட்டு வாங்கிவிடலாம் என்ற லட்சியத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஆதவ் அர்ஜூன் நுழைந்திருக்கிறார், அவருக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை திருமாவளவன் கேட்டு வாங்குகிறார் என்பதையே குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜூனுக்கு ஐ.டி. விங்க் தலைவர் போன்று ஏதேனும் பதவி கொடுத்திருந்தால் பரவாயில்லை, வந்து ஒரே மாதத்திற்குள் துணை பொதுச்செயலாளர் என்பதை எப்படி ஏற்கமுடியும் என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் சர்ச்சையாக ஓடிக்கொண்டு இருந்தாலும் திருமாவளவன் இதுவரை வாய் திறந்து விளக்கம் தரவில்லை.

இந்த நிலையில் வன்னியரசு இன்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திருமாவளவன் ஒவ்வொரு முடிவுகளை அறிவிக்கும் போதும் உதிரிகளும் எதிரிகளும் வன்மத்தை கக்கி வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆதவ் அர்ஜூனை கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக அறிவித்தவுடன் அந்த வன்மத்தர்கள் வழக்கத்தை விட அவதூறு பரப்பி வருகிறார்கள். இதன் நோக்கம், அர்ஜூன் போன்ற தலித் அல்லாத இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகளில் இணைந்து, கட்சியையும் தலைமையையும் வலிமைப்படுத்தி விடக்கூடாது என்பதே அதன் உள்நோக்கமாக உள்ளது.

 “தலித் தலைமையை நிறுவுவோம்” என 90களின் தொடக்கத்தில் எழுச்சித்தமிழர் முழங்கினார். இன்று அந்த முழக்கம் செயல் வடிவமாகி வருவது கண்டு தலித் விரோதிகளும் தலித் உதிரிகளும் பாவம் பொருமுகின்றனர். அந்த பொருமலின் புகைச்சலே இந்த அவதூறு பரப்புரை. விடுதலைச்சிறுத்தைகள் மீது பொதுச்சமூகம் அங்குலம் அங்குலமாக நம்பிக்கை வைத்து வருவதை ‘நக்குற மாடுகளால்’ ஒன்றும் மேய்ந்திட முடியாது’ என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும், பணத்துக்கு திருமாவளவன் விலை போய்விட்டார் என்பதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் சிறுத்தைகள். இந்த பிரச்னையை முடித்துவைப்பதற்காக வரும் தேர்தலில் வன்னியரசுவை எம்.பி. தொகுதியில் நிற்க வைப்பாரா என்றும் கேட்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link