Share via:
தி.மு.க.வில் எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி என்பது குறித்து
தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. அந்த வகையில் வைகோவின் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி
ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பாக ஈரோடு
தொகுதியில் கணேச மூர்த்தி போட்டியிட்டார். இந்த தொகுதியில் கணேசமூர்த்திக்கு கடுமையான
எதிர்ப்பு இருப்பதால், அவருக்கு சீட் இல்லை என்று தி.மு.க. முடிவு செய்திருக்கிறது.
எனவே, இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதற்கு தி.மு.க. முடிவு செய்திருக்கிறதாம்.
அதேநேரம், துரை வைகோவை எம்.பி. ஆக்க வேண்டும் என்ற ஆசையை தி.மு.க.விடம்
தெரிவித்திருக்கிறார் வைகோ. அவருக்காக திருச்சி தொகுதியை ஒதுக்குவதற்கு தி.மு.க. முன்வந்திருக்கிறதாம்.
ஏனென்றால் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசருக்கு எதிரான மனநிலையில்
மக்கள் இருக்கிறார்கள். மேலும், காங்கிரஸ் கட்சியினரும் தி.மு.க.வினரும் திருநாவுக்கரசர்
மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆகவே, திருநாவுக்கரசருக்கு சீட் கொடுத்தால்
தோற்றுப் போவார் என்று தி.மு.க. எடுத்த் சர்வே தெரிவிக்கிறதாம். இதன் அடிப்படையில்
காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கவும் திருநாவுக்கரசரை வேட்பாளராக ஏற்கவும் தி.மு.க.
தயாராக இல்லை.
இந்த நிலையில் தான், திருச்சியைக் குறிவைத்து துரை வைகோ தீவிரமாக
செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் திருச்சியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் துரை
வைகோ பங்கேற்றார். மேலும், மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் துரை வைகோ தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆகவே, இப்போதே துரை வைகோ திருச்சியில் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டதாகக்
கூறப்படுகிறது. நேருவின் ஆதரவும் துரை வைகோவுக்கு இருப்பதால் வெற்றி உறுதி என்கிறார்கள்.