Share via:
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க. வேட்பாளராக நிற்பதற்கு
பெரிய போட்டியே நிலவியது. ஆனால், வரும் 2024 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில்
கூட்டணி வைக்கப்போவது உறுதியில்லை என்று தெரியவந்ததும், அத்தனை முக்கியப் புள்ளிகளும்
வேட்பாளராக விரும்பாமல் தப்பியோடுவதாகத் தெரிகிறது.
நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு எதிராக எல்.முருகன் நிறுத்தப்படுவார்
என்று கூறப்பட்டது. எனவே, எல்.முருகனுக்கு தேர்தல் வேலைகளும் தொடங்கி நடந்துவந்தன.
ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி இல்லை என்றதும் தோல்வி நிச்சயம் என்பதால் தேர்தலில்
நிற்பதற்கு எல்.முருகன் விரும்பவில்லையாம். ஆகவே, மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மத்தியப்பிரதேசத்தின் 4 இடங்களில் ஒன்றில் தமிழ்நாட்டைச்
சேர்ந்த எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்தியப்பிரதேசத்தில்
இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எல்.முருகன், மத்திய இணையமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் அதே மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மக்களவைத்
தொகுதியில் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்ப்பாக்கப்பட்ட
நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எல்.முருகன் போட்டியிடுவது உறுதியில்லை என்றதுமே இதுவரை ஆர்வம்
காட்டி வந்த தமிழிசை செளந்தரராஜனும் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டாராம். தொடர்ந்து
தமிழக அரசை விமர்சித்து அரசியல் செய்துவந்த தமிழிசை இப்போது கவர்னர் வேலையை மட்டும்
பார்த்துக்கொண்டு இருப்பதற்கு காரணம், தோல்வி பயம் தானாம்.
அதேபோல் குஷ்பு மிகத் தெளிவாகவே தன்னுடைய நிலையை சொல்லிவிட்டாராம்.
அ.தி.மு.க. இல்லையென்றால் நின்று தோற்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் ஏற்கெனவே தேர்தலில் இருந்து
ஒதுங்கிவிட்டனர். கரு.நாகராஜன், தடா பெரியசாமி ஆகியோரும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.
ஆகவே, யாராவது வேட்பாளரா நில்லுங்கப்பா என்று அண்ணாமலை கெஞ்சும் அளவுக்கு பா.ஜ.க. நிலைமை
மாறியிருக்கிறது.