Share via:
தமிழக பா.ஜ.க.வின் அரசியல் மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக
பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சென்னைக்கு வருகை தரும் நிலையில், புதிய தமிழகம்
கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருப்பது கடும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வின் அசைக்க முடியாத கூட்டாளியாக இருந்தவர் புதிய தமிழகத்தின்
கிருஷ்ணசாமி. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து
தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு
தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற
விடுத்த கோரிக்கையை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும்
எங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தராமல் பாஜக அரசு ஏமாற்றிவிட்டது என்று வெளிப்படையாக
கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘தற்போது புதிய தமிழகம் கட்சி தேர்தல் கள நிலவரங்களை
ஆய்வு செய்து வருகிறது. தேர்தல் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்ட
வெள்ளத்திற்கு உரிய நிதியைப் பெற மாநில அரசு போராடவில்லை. மாநில முதல்வர்கள் டெல்லியில்
போராடும் நிலை ஏற்படுவது ஆரோக்கியமான போக்கு கிடையாது. மாநில அரசுக்கு உரிய நிதி வழங்காதது
சர்வாதிகாரப் போக்கு. நிதி பகிர்வில் வெளிப்படைத் தன்மை என்பது மிகவும் அவசியம்.
அதிமுக-பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால்
அதிமுக-பாஜக இடையே விரிசல் அதிகரித்து, வடதுருவம் தென்துருவம் போல் செயல்படுகிறது.
இந்நிலையில் அதிமுக-பாஜக மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. தேவேந்திர குல வேளாளர் மக்களை
பாஜக ஏமாற்றிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் திடீர் வாக்குமூலம் பா.ஜ.க.வை பதற வைத்துள்ளது.
ஏனென்றால் நட்டா வரும்போது கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற வகையில் அவரை சந்திக்க வைப்பதற்கு
ஏற்பாடுகள் நடந்துவந்தன. அ.தி.மு.க. இல்லாமல் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்வது பலன் அளிக்காது
என்பதாலே கிருஷ்ணசாமி இப்படி பேசியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் எடப்பாடி
அணியினருக்கு உற்சாகம் அளித்திருக்கிறது.