Share via:
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வரும்போது
போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் குடியேற ஆசைப்பட்டார் வி.கே.சசிகலா. ஆனால், எடப்பாடி பழனிசாமி அவரது ஆசையை கலைக்கும் வகையில்
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றியது. அதோடு நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின்
அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது.
தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி ஆன்மீக பயணம் கிளம்பினார். எடப்பாடிக்கு
சிக்கல் தரக்கூடாது என்பதற்காக டெல்லி பா.ஜ.க. அழுத்தம் காரணமாகவே அப்படியொரு முடிவு
எடுக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் தி.நகர் இல்லத்தில் தங்கிவந்த சசிகலாவுக்கு அது
பிடித்தமானதாக இல்லை. மேலும் தன்னுடைய அரசியல் பணிக்கு அது சரிப்படாது என்று நினைத்தே
போயஸ் கார்டன் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும்
பணியைத் தொடங்கினார்.
கட்டுமானப் பணிகள் நடந்தபோதே, இந்தச் சொத்துகளை முடக்கியும் வருமான
வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படாததால்,
தொடர்ந்து பணிகள் நடந்தன. எந்த நிலையிலும் கட்டிடத்துக்கு தடை விதிக்கப்படும் என்று
கருதப்பட்ட நிலையில், அது முழுமையாக முடிவுக்கு வந்தது.
டெல்லி பா.ஜ.க. மேலிடத்துடன் தொடர்பில் இருப்பதாலும் நரேந்திர
மோடியின் ஆசி காரணமாகவே இந்த வீடு கிரகப்பிரவேசத்தை சசிகலா தைரியமாக நடத்தினாராம்.
ஜெயலலிதா பங்களாவை விட பெரிதாக கட்டப்பட்டு பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார்.
இந்த நிகழ்வுக்கு தினகரன் அழைக்கப்படவில்லை. விவேக், இளவரசி ஆகியோர்
மட்டுமே முக்கியப் பங்கு வகித்தனர். அரசியல் ரீதியாக சிக்கல் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக
தடை போட்டதாக சொல்லப்பட்டாலும், இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பதுதான்
உண்மை என்று சசியின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
புது வீட்டு ராசி சசிகலாவுக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.