Share via:
தமிழர்களுக்கு இளையராஜாவின் இசை இல்லாமல் பகல் விடியாது, இரவு
முடியாது. அந்த அளவுக்கு தமிழர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது இளையராஜாவின் இசை.
அந்த இசைஞானியின் வாரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி. இந்த மூவரில்
இளையவரான பவதாரணியின் மறைவு தமிழக இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இளையராஜாவின் மகளாக மட்டுமின்றி அற்புதமான பாடகராகவும் தமிழ்
ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த பவதாரணிக்கு இப்போது 47 வயது மட்டுமே ஆகிறது. கடந்த
சில வருடங்களாக பவதாரணிக்கு உடல் நலத்தில் சின்னச்சின்ன பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் தான் கல்லீரல் புற்றுநோய் ஆபத்தான கட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆபத்தான கல்லீரல் புற்றுநோய்க்கு அலோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டு
இருந்த நேரத்திலேயே நோய் தீவிரமடைந்துள்ளது. ஆகவே, உயர் சிகிச்சைக்காக, கடந்த ஐந்து
மாதங்களாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
பொதுவாக புற்றுநோய் என்பது உயிரணுக்களில் ஏற்படுகிற அசாதாரண வளர்ச்சி. ரத்தம் தொடங்கி
உடலின் எல்லா உறுப்புகளையும் புற்றுநோய் பாதிக்கக்கூடியது. கல்லீரலில் ஆரம்பகட்ட புற்று
நோய் என்றால் கல்லீரல் வெட்டி எடுக்கப்படுகிறது. முற்றிய நிலையில் சிகிச்சையில் பிரச்னை
ஏற்படுகிறது. இத்தகைய கல்லீரல் புற்றுநோய் காரணமாகவே பவதாரணி மரணம் அடைந்துவிட்டார்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரும் பவதாரணியின்
உடல் இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. ஏராளமான பாடல்களை
பவதாரணி பாடியிருந்தாலும் அவரது சூப்பர் ஹிட் பாடல்கள் ஐந்து காலம் முழுக்க நிலைத்து நிற்கக்கூடியது.
பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’
படத்திலேயே அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய
மஸ்தானா மஸ்தானா பாடல்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களை பவதாரணி என்ற பாடகியை அடையாளம்
காட்டியது.
1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு
ப்ளாக் பஸ்டர் ஹிட். இளையராஜாவின் இசையில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த
“இது சங்கீதத் திருநாளோ” பாடல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
இளையராஜாவின் இசையையும் தாண்டி, பவதாரிணியின் மந்திரக் குரலும் அதற்கு ஒரு காரணமாக
இருந்தது.
பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா
படத்தில் இடம்பெற்ற, ‘என் வீட்டு ஜன்னல் எட்டி…’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. படம்
மிகப்பெரும் வெற்றி அடையவில்லை என்றாலும் தமிழர்களால் ரசிக்கப்பட்ட பாடல் இது.
பிரபுதேவாவும் சிம்ரனும் நடித்து ‘டைம்’ என்ற திரைப்படத்தில்
பவதாரணி பாடியிருந்த தவிக்கிறேன் தவிக்கிறேன் என்ற பாடல் அற்புதம் என்றே சொல்லலாம்.
இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலில் பல இடங்களில் பவதாரிணியின் குரல் அட்டகாசம்
செய்திருப்பார்.
எல்லோருக்கும் தெரிந்தது மட்டுமின்றி தேசிய அளவில் பவதாரணியைக்
கொண்டுசென்றது பாரதி படத்தில் மயில் போல பொண்ணு பாடல்தான். மு. மேத்தா எழுதிய இந்தப்
பாடலை பவதாரிணி பாடியிருந்தார். ஒரு குழந்தை பாடுவதைப் அமைந்திருக்கும் இந்தப் பாடல்,
கேட்போரை மயங்கச் செய்தது. “குயில் போல பாட்டு ஒன்னு, கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல” என அந்தப் பாடலில் வரும் வரிகளைப்
போலவே, நீண்ட மயக்கத்தைத் தந்த பாடல். இந்தப் பாடலுக்காக பவதாரணிக்கு சிறந்த பின்னணிப்
பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இவை எல்லாவற்றையும் விட பவதாரணிக்கு அடையாளம் என்பதே அழகி படத்தில்
அவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் தான். இந்த பாடல் எப்போது கேட்டாலும் பவதாரணியின்
முகம் வந்து போகும்.
இவை தவிர ஒரு நாள் ஒரு கனவு படத்தில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த
காற்றில் வரும் கீதமே பாடலை ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் ஆகியோருடன் இணைந்து பாடியிருப்பார்
பவதாரணி. இதுதான் பவதாரணியின் குரலில் இளையராஜாவுக்குப் பிடித்த பாடலாகும்.
நடிகை ரேவதி இயக்கிய எலி மை ஃப்ரெண்ட், பிர் மிலாங்கே ஆகிய படங்களுக்கு
இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் பவதாரணி.
காற்றில் கலந்து போனாலும் பாடலாக என்றென்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருப்பார்
பவதாரணி.