Share via:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
பிரபல நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் தீவிரமாக அரசியல் பணியாற்றி வந்த நிலையில், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்ததோடு அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதிலும் குறிப்பாக பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து காயத்ரி ரகுராம் எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் மௌனம் காத்து வந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நடிகை காயத்ரி ரகுராம் இன்று (ஜன.19) திடீரென்று சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திடீர் சந்திப்பின் போது அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் காயத்ரி ரகுராம்.
அப்போது பேசிய அவர், என் குடும்பத்தினர் எப்போதும் அ.தி.மு.கவினர் தான். நன்றியை மறக்க வேண்டாம் என்பதற்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன் என்று கூறினார்.