Share via:
தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன
என்று அமித் ஷா அறிவித்திருக்கிறார். ஆனால் எடப்பாடியோ, ‘இப்படி ஒரு பேட்டியை நான்
பார்க்கவே இல்லை’ என்று நழுவுகிறார். ஆக, பா.ஜ.க. கூட்டணியில் சேரும் விருப்பம் எடப்பாடி
பழனிசாமிக்கு இல்லை என்றே தெரியவருகிறது.
இப்படி ஒரு சூழலை கணக்கிட்டு அண்ணாமலை 40 தொகுதிகளுக்கும் ஒரு
உத்தேச பட்டியல் தயார் செய்திருக்கிறார். அண்ணாமலை கணக்குப்படி தமிழகத்தில் பா.ஜ.க. 17 தொகுதிகளில் போட்டியிடுகிரது.
அடுத்தபடியாக ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடம் ஒதுக்கப்படுகிறது.
14 இடத்துக்கு ஆசைப்படும் பிரேமலதாவுக்கு 4 இடங்களும் பன்னீர்
செல்வம் அணிக்கு 3 இடங்களும் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு 2 இடங்களும் ஜி.கே.வாசனின்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்படுகிறது.
இவை தவிர புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, சரத்குமாரின் சமத்துவ
மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்
கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி வேட்பாளர் பட்டியலும்
தயாராகவே இருக்கிறது.
அந்த பட்டியல் படி கன்னியாகுமரியில் தற்போதைய கவர்னர் டாக்டர்.
தமிழிசை செளந்திரராஜன், நிறுத்தப்படுகிறார். நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.
முருகன், திருப்பூர் தொகுதியில் பேரா.பி.கனகசபாபதி, ஈரோடு தொகுதியில் ஜி.கே. நாகராஜன்,
கோயம்புத்தூர் தொகுதியில் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் நிறுத்தப்படுகிறார்கள்.
விருதுநகரில் பா.ஜக.வை சேர்ந்த பேரா.சீனிவாசன் போட்டியிடுகிறார்.
திண்டுக்கல் தொகுதியில் எம்.எஸ்.ஷா, கிருஷ்ணகிரியில் கே.எஸ்.நரேந்திரன், திருவண்ணாமலையில் கே.ஆர்.பாலசுப்பிரமணியம், தூத்துக்குடியில்
சசிகலா புஷ்பா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
காஞ்சிபுரம் தொகுதியில் வி. பி. துரைசாமி, வடசென்னை தொகுதியில்
கரு. நாகராஜன், மத்திய சென்னையில் குஷ்பு சுந்தர், தென்சென்னை டாக்டர் மைத்திரேயன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பா.ம.க.வுக்கும் வேட்பாளர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சிதம்பரம் தொகுதியில் தடா பெரியசாமி, நாகப்பட்டினத்தில் புரட்சி கவிதாசன் நிறுத்தப்படுகிறார்கள்.
கடலூர் தொகுதிக்கு பா.ஜ.க.வின் வினோஜ் பெ.செல்வம் அல்லது பா.ம.க.வின் பு.தா.அருள்மொழி
நிற்பார்கள்.
விழுப்புரத்தில் பா.ம.க.வின் வடிவேல் ராவணன், தர்மபுரியில் டாக்டர்
செந்தில், ஆரணி தொகுதியில் ஏ.கே.மூர்த்தி,
அரக்கோணம் தொகுதிக்கு ஆர்.வேலு, ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் வக்கீல் கே.பாலு ஆகியோர்
நிற்கிறார்கள். மேலும் திருவள்ளூர் அல்லது
கரூர் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படலாம்.
தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் கள்ளக்குறிச்சி தொகுதியில்
விஜய பிரபாகரன். சேலத்தில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நிற்கிறார்கள். அதோடு நாமக்கல், பொள்ளாச்சி
தொகுதியும் தே.மு.தி.க.வுக்குக் கொடுக்கப்படுகிறது.
தேனியில் ஏற்கெனவே ஜெயித்திருக்கும் சிட்டிங் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்
மீண்டும் களம் காண்கிறார். அதேபோல் மதுரை மற்றும் தஞ்சாவூர் தொகுதியும் ஓ.பி.எஸ். அணிக்கு
ஒதுக்கப்படுகிறது.
அ.ம.மு.க.வின் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு சிவகங்கையும் திருச்சி
தொகுதியும் ஒதுக்கப்படுகிறது. மயிலாடுதுறை ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்படுகிறது.
பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டு
அங்கு பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து நிறுத்தப்படுகிறார். திருநெல்வேலியில் நடிகர்
ஆர்.சரத்குமார் நிற்கிறார். தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு டாக்டர்.கிருஷ்ணசாமி
போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ. சி. சண்முகம்
நிற்கிறார். . ராமநாதபுரத்தில் தேவநாதன் யாதவ் நிறுத்தப்படுகிறார்.
இந்த வகையில் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது,
இந்த தேர்தலில் பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. தவிர மற்ற அத்தனை
கட்சியினரும் தாமரை சின்னத்தில் நிறுத்தப்படுவார்களாம். இந்த பட்டியல் அமித் ஷா கையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ன முடிவு எடுக்கப்போகிறார் அமித் ஷா என்பதை பொறுத்திருந்தே
பார்க்க வேண்டும்.