News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர் அத்தனை பேரும், அவர் சசிகலா காலில் விழுந்து தவழ்ந்து சென்று பதவி வாங்கியவர்கள் என்று கிண்டல் செய்வது வழக்கம். இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மதச்சார்பின்மை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘’நான் முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. உங்களை போலத்தான் நானும் அமர்ந்து இருந்தேன். ஆனால் அப்படியே உட்கார்ந்தே இருக்கவில்லை. தவழ்ந்து சென்றேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதுதான் உழைப்பு. ஆனால் அந்த உழைப்பை கூட சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். உழைப்பு என்றால் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியுமா? ஒரு சாதாரண கிளைச்செயலாளராக இருந்தவன் நான். பின்னர் உழைப்பால் பொதுச்செயலாளர் ஆனேன். அதன் பிறகு முதலமைச்சர் ஆனேன். ஆனால் முதல்வர் ஸ்டாலினின் கதை அப்படியா.. அவரது அப்பாவின் மூலமாக எந்த உழைப்பும் இல்லாமல் நேராக எம்எல்ஏ ஆகி, முதல்வர் ஆனவர் தான், தமிழகத்தை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறா

நாட்டு மக்களை கவலைப்படாமல் எப்போதும் தனது வீட்டு மக்களை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வராக ஸ்டாலின் விளங்கி வருகிறார். இதுதான் தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு காரணம். சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதுதான் எங்கள் கொள்கை. எங்கள் தலைவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததை தான் அதை தான். அதிமுக என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும் என்பதை இங்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை’’ என்று பேசியிருக்கிறார்.

தவழ்ந்து தவழ்ந்துதான் பதவிக்கு வந்தேன் என்று எடப்பாடியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டால், இனி அதுகுறித்து எதிர்க் கட்சியினர் விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று அவரது அரசியல் ஆலோசகர்கள் கூறியதை அடுத்தே இதுகுறித்து பேசினாராம். இன்னுமா ஆலோசகர்கள் கூறியதைக் கேட்டு பேசுகிறார் என்று அவரது ஆதரவாளர்களே நொந்து போகிறார்கள்.

அதேநேரம், பிரதமர் யார் என்று இப்போது அறிவிக்கத் தேவையில்லை என்றும் பா.ஜ.க.வுடன் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அறிவித்திருப்பது அண்ணாமலை காதில் புகை வர வைத்திருக்கிறாம். ஆக, அடுத்த ரவுண்ட் மோதல் அவருக்கு எடப்பாடியுடன் தான் என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link