Share via:
பா.ஜ.க. ஆட்சி அமைத்த காலத்திலிருந்தே ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது
என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த ஆட்சி முடிவடைய இருக்கும் கடைசி சில மாதங்களில் இந்த
சட்டத்தை நிறைவேற்றும் முடிவில் மோடி அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான முதல்கட்ட
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நிர்வாக கட்டமைப்பில்
சட்ட மாற்றங்களை செய்ய ஏதுவாக பொதுமக்களின் பரிந்துரைகளை பெறுவதற்கான பொது அறிவிப்பை
மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உயர்நிலைக் குழு – ஒரே நாடு ஒரே தேர்தல் அமைப்பின் செயலாளர் சார்பில்
வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் இமெயில் மூலமாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
என்று கூறப்பட்டுள்ளது. இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள தேதி 5-01-2024 அன்று
வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு 15-01-2024 தேதிக்குள் பெறப்படும் பரிந்துரைகள்
மட்டுமே குழுவின் பரிசீலனைக்கு முன் வைக்கப்படும் என்றும் பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்
கருத்துக்கள், பரிந்துரைகளை தெரிவிக்க வெறுமனே
10 தினங்கள் மட்டுமே வழங்கியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கே பல்வேறு
கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில்
140 கோடி மக்கள் வாழும் நாட்டில் 10 நாட்களுக்குள் கருத்துக்களை பெற்று, சட்டமாக்கி
நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் கொண்டுவர நேர்ந்தால் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள்
எல்லாமே கடும் சிக்கலை சந்திக்கும். நாடாளுமன்றத்துடனே சட்டமன்றத்துக்கும் தேர்தல்
நடக்கும்போது, மாநிலக் கட்சியால் முழு அளவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு முடியாமல்
போகும்.
இந்த சிக்கலை இந்தியா கூட்டணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப்
பொறுத்தே இந்த சட்டத்துக்கு எதிர்காலம் இருக்கும்.