Share via:
எடப்பாடியால் கழட்டிவிடப்பட்ட டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும்
இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதாக மேடைக்கு மேடை கூறப்பட்டு வந்தது.
அதோடு இவர்கள் இருவரையும் பா.ஜ.க. கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் என்றும் நம்பிவந்தனர்.
இன்னமும் இந்த கூட்டணி உறுதியாவதற்கு முன்னரே உடைந்துபோகும் நிலை
ஏற்பட்டுள்ளது. காரணம் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் நிற்பதற்கு ஆசைப்படுவதுதான்.
தற்போது இந்த தொகுதியின் எம்.பி.யாக பன்னீரின் மகன் ரவீந்திரநாத் இருந்துவருகிறார்.
வரும் தேர்தலிலும் பா.ஜ.க. துணையுடன் எப்படியும் மகனை ஜெயிக்க வைத்துவிடுவது என்ற ஆசையில்
இருந்தார் பன்னீர்.
ஆனால், திடீரென தன்னுடைய நாடாளுமன்றத் தேர்தல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்
தினகரன். இவர் ஏற்கெனவே தேனியில் நின்று தோற்றுப் போயிருக்கிறார். ஆனாலும், இப்போது
இங்கே நின்று ஜெயித்துவிட முடியும் என்று நினைக்கிறார். ஜாதி மக்கள் மற்றும் பணம் தனக்கு
கை கொடுக்கும் என்றும் நினைக்கிறார்.
எடுத்தவுடனே தன்னுடைய அடிமடியில் கைவைக்கும் தினகரனை நம்பி எப்படி
கூட்டணி வைத்துக்கொள்வது என்று அதிர்ந்து நிற்கிறார் பன்னீர். இதற்கும் உடனே பெரியண்ணன்
மோடியின் மூலமே பஞ்சாயத்து பேசிக்கொள்ள ஆசைப்படுகிறார்.
இந்த நேரத்தில் தினகரனின் தேர்தல் அறிவிப்பையடுத்து, நடிகர் மன்சூர்
அலிகான் அறிக்கை வெளியிட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார். அதில், ’தினகரன் புரட்சித்
தலைவி அம்மாவின் பெயரால் வெற்றிபெற்றார். ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு
கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு
எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து
உலையில் போட்டார்கள். எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம்
செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஆலமரமான, அன்பின் ஆண்டாளான,
”அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி, ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடுரத்தை
எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ல், நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில்
நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம்
என்று கூறியிருக்கிறார்.
தேனியின் தேர்தல் அரங்கம் ஆரம்பத்திலே அமர்க்களமா இருக்குதே…