Share via:
துபாயில் இருந்து திரும்பிய நடிகர் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கேப்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு இணையதளம் வாயிலாக அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் தமிழக அரசின் முழு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குடும்பத்துடன் துபாய் சென்று திரும்பிய நடிகர் சரத்குமார் இன்று (ஜன.3) சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு சென்று கேப்டன் சமாதி முன்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்திற்கு, சரத்குமார் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.