Share via:
தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (ஜன.3) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. வீட்டிற்குள் புகுந்த வெள்ளநீர் பொதுமக்களின் அனைத்து பொருட்களையும் நாசமடைய செய்ததுடன் பலரின் வீடுகள் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக நிலைமை சீரானது. மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர். தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி செய்யப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக, கனிமொழி எம்.பி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 27 இலட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்குக் கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனாக 32 பயனாளிகளுக்கு ரூ. 72 இலட்சம் கடன் உதவிக்கான காசோலைகளையும் வழங்கி பேசினார்.