Share via:
அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுக்க பெரும் அனுதாபக் கூட்டம்
நடத்தப்பட்டது. அந்த வகையில் உண்மையிலே நெஞ்சம் முழுக்க பாசத்துடனும் நேசத்துடனும்
எக்கச்சக்க அபிமானிகள் வந்து குவியும் அளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார்
விஜயகாந்த்.
அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,
சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை
அடைந்து, மாலை 4:45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் முகத்தை காண்பதற்கு நேற்று தே.மு.தி.க. அலுவலகத்தில்
மக்கள் கூட்டம் அலை மோதியது என்றால், இன்று தீவுத்திடலில் அதைவிட அதிகம் கூட்டம் வந்து
நிற்கிறது. தொலைக்காட்சியில் பார்த்தால் போதாது என்று நேரில் வந்து குவியும் மக்கள்
எண்ணிக்கையை பார்க்கும்போது, எத்தகைய நல்ல மனிதராக அறியப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.
விஜயகாந்த்தை மக்கள் ஒரு மாற்று சக்தியாகப் பார்த்தார்கள். மேலும்
மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று 2006 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2009 மக்களவை தேர்தல்களில்
கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டார்.
கட்சி தொடங்கி ஓராண்டிலேயே 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்
தேர்தல்களில் 8.4% வாக்குகள் பெற்றிருந்தார். 2009 மக்களவை தேர்தல்களில் 10.3% வாக்குகள்
பெற்றிருந்தார்.
ஆனால், அதன் பின் கூட்டணி அரசியலில் ஈடுபட்டார். அப்போது, தேமுதிகவுக்கு
கிடைத்த வந்த ஆதரவு சரிந்தது. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் 7.9% வாக்கு சதவீதமும்,
2014ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் 5.1% வாக்கு சதவீதம் பெற்றது தேமுதிக. அடுத்து நடைபெற்ற
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில்2.4% வாக்குகளும்., 2021ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில்
0.43% வாக்குகள் பெற்றார்.
சினிமாவில் விஜயகாந்த் செய்த சாதனைகளில் முக்கியமானது, புதிய
கலைஞர்களை அறிமுகம் செய்ததுதான். அவரது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை
அறிமுகம் செய்திருக்கிறார். இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் செய்ததில்லை. அந்த அளவுக்கு
புதிய நபர்கள் மீது அழுத்தமான நம்பிக்கை வைத்தார்.
அதனாலே விஜயகாந்த் மறைவு டெல்லி வரையிலும் எட்டியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ’விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின்
ஜாம்பவான், அவரது கம்பீரமான நடிப்பு கோடிக் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது.
ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர்,
மக்கள் சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை
உருவாக்கியுள்ளது, அதை நிரப்புவது கடினம். அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்,
பல ஆண்டுகளாக அவருடன் எனக்கு இருந்த நட்பை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான
தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’ என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அத்தனை கட்சித் தலைவர்களும்
தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் முதல் அனைத்து கலைஞர்களும்
அதிர்ந்து வேதனையை பகிர்ந்துள்ளார்.
பெருவாழ்வு வாந்திருக்கிறார் விஜயகாந்த்.

