Share via:
எண்ணூர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து சோதனை மேல் சோதனை வந்துகொண்டே
இருக்கின்றன. திருவொற்றியூர் பகுதி தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது
சில அசம்பாவிதங்கள் நடந்துவந்தன. இதையடுத்து மிக்ஜாம் புயல் நேரத்தில் ஆலை எண்ணெய்
கசிவால் எண்ணூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இதற்கு நிவாரணம் இன்னமும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. அதேபோல்,
கடலில் எண்ணெய் படலம் இன்னமும் அகற்றப்பட முடியவில்லை.
அதற்குள் எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து மக்களை வீட்டை விட்டு வெளீயே விரட்டியுள்ளது.
வாயுக் கசிவால் பாதிப்படைந்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதி மக்கள்
தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பலருக்கும் மூச்சுத் திணறல்,
மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு
வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால்
அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில்
திடீரென கடுமையான நெடி பரவியிருக்கிறது. இது என்னவென்று அவர்கள் யோசிப்பதற்குள் அந்த
கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கின்றன.
30-க்கும் மேற்பட்ட மக்கள் அலறியடித்து அருகிலுள்ள மருத்துவமனைகளில்
சேர்ந்திருக்கிறார்கள். இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு
பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் தொழிற்சாலையின் அலட்சியம்
மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா
வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் என்று
கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது
இது முதல் முறையல்ல என்றும் கடந்த காலங்களில் இதேபோல் பல முறை வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும்
பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றால், தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியதோ,
அதே பாதிப்பை கோரமண்டல் நிறுவனமும் ஏற்படுத்தியதாகத் தான் கருத வேண்டியிருக்கும்.
இனியாவது தமிழக அரசு அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்வது மட்டுமின்றி, தேவையான நிவாரண நிதியும் தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த ஆலையில் சாதாரண விபத்தே இப்படி என்றால் கூடங்குளம் போன்ற
அணு உலைகளில் சிக்கல் ஏற்பட்டால் எத்தகைய அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை
அரசுகள் இனியாவது யோசித்து செயல்பட வேண்டியது அவசியம்.