Share via:
தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள கனிமொழி எம்.பி. பெரு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பெரியளவு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க. துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் முகாமிட்டு பெருமழைவெள்ள சேதங்களை பார்வையிட்டு மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியநாயகபுரம் ஊராட்சி பகுதிக்கு சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.
அதேபோல் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பழையகாயல் ஊராட்சியில் உள்ள கணேசபுரத்திற்கு சென்ற அவர், நிவாரண பொருட்களை வழங்கி தேவைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.