Share via:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெருமழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. பல முறை ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கியும், மருத்துவ முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும் வருகிறார்.
அந்தவகையில் தூத்துக்குடியில் நேற்று (டிச.24) திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சி ஊராட்சியில் உள்ள இந்திரா நகர், காமராஜர் நகர், தெற்கூர், காமராஜர் தெரு, இந்திரா காலனி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்து அவர்களின் துயர் துடைக்கும் வகையில் கோரிக்கைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.