Share via:
பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருட்களை வழங்கி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (டிச.25) பயணம் மேற்கொண்டார். பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.