Share via:
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய பெருமழை வெள்ளத்தால் பாலம் உடைந்த நிலையில், குருங்காட்டூர் வழியாக ஏரல் பகுதிக்கு செல்ல தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெருமழை வெள்ளத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த கற்கள் அடித்து செல்லப்பட்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பாலம், சாலைகள் உடைந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதன் காரணமாக படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பொது மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நெடுஞ்சாலைகள மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (டிச.22) தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று அங்கு சிதைவடைந்த பாலங்கள் மற்றும் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவைகுண்டம், ஏரல் பகுதியில் உடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும் பாலம் உடைந்து, போக்குவரத்து ஸ்தம்பித்ததால், குருங்காட்டூர் வழியாக ஏரல் பகுதிக்கு செல்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக சாலையை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.