Share via:
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. மக்களவையில் பார்வையாளர்ள் இருக்கையில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அவர்களின் கைகளில் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருப்பதை பார்த்து பதறிப்போனதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் படிப்படியாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிரடியாக அவையை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் குதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் இன்று (டிச.22) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். இந்த போராட்டத்தின் போது பா.ஜ.க. அரசை கண்டித்தும், பாராளுமன்றத்தில் அவை உறுப்பினர்களுக்கே உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த கூட்டத்தின் எம்.பி.தொல். திருமாவளவன் தொண்டர்கள் முன்பு உரை நிகழ்த்தினார்.