Share via:
கடந்த (டிசம்பர்) 13ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென்று அவை நடந்து கொண்டிருந்த போது உள்ளே குதித்தனர். அந்த இருவரின் கைகளிலும் வண்ணப்புகையை பீச்சியடிக்கும் கருவிகள் இருந்ததாக அவை உறுப்பினர்கள் வெளியில் வந்து பேட்டி அளித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அதே நாளான டிசம்பர் 13ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பி போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில் 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தென்சென்னை (கிழக்கு) மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக இன்று (டிச.22) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது பா.ஜ.க.வின் பாசிச அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.