Share via:
எண்ணூரில் படிந்துள்ள எண்ணெய் கசிவை உடனடியாக நீக்கக் கோரி சென்னை திருவொற்றியூரில் சின்னக்குப்பம் மீனவ மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிக்ஜாம் புயலின் போது கசிந்த எண்ணெய் படலம் எண்ணூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்புள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், மீன்பிடி படகுகள், வலைகள் என அனைத்தும் நாசமானதால் அப்பகுதி மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீனவ குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட படகுகளை சீரமைக்கவும் நிவாரண தொகையை அறிவித்துள்ளது. மேலும் எண்ணெய் கசிவை நீக்கும் பணி நடைபெற்று வந்தாலும் அதனை வேகப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் கலந்த நீரின் மேல் பகுதியில் மீன், இறால், நண்டு உள்ளிட்டவை இறந்து மிதப்பதால் பொதுமக்கள் மீன் வாங்க அச்சப்படுகின்றனர்.
அந்த வகையில் சென்னை தாழங்குப்பம், சின்னக்குப்பம் பகுதி மீனவ மக்கள் சென்னை திருவொற்றியூரில் ஒன்றாக திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் கசிவு அகற்றும் பணியை துரிதப்படுத்த கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.