Share via:
9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிதான் மிகப்பெரிய பேரிடர் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் இளம்வயதிலேயே அமைச்சர் உதயநிதி, இந்திய அளவில் மிகப்பெரிய பிரபலமாக மாறியதற்கு அவரது துணிச்சலான பேச்சு ஒரு காரணமாகும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் சனாதனம் குறித்த பேச்சு. இந்த விவகாரத்தில் சட்டசிக்கல்களை நான் சந்திக்கத் தயார் என்று மிகவும் தைரியமாக அமைச்சர் தயாநிதி பேசியது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் (டிசம்பர்) மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்ய மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரண நிதி கேட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு சரியான பதில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில், அமைச்சர் உதயநிதி, உங்கள் அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம். மக்களின் வரிப்பணத்தை தான் கேட்கிறோம் என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
இப்போது அந்த பிரச்சினைதான் பூதாகரமாக வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து நிவாரண நிதி குறித்தும், மிக்ஜாம் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியது குறித்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அப்போது அமைச்சர் உதயநிதிக்கு நாவடக்கம் வேண்டும் என்றும், அவர் தனது பதவிக்கு தகுந்ததுபோல் பேச வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘பேரிடருக்கான நிதியை மட்டும்தான் கேட்டேன். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பேரிடர் கால நிதி கேட்ட விவகாரத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலாக்கப் பார்க்கிறார். அப்பன் என்பது கெட்ட வார்த்தையா என்று கேள்வி எழுப்பிய அவர், தொடர்ந்து பேசினார். 9 கால பா.ஜ.க. ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதால், மழை வெள்ளத்தை தனியாக பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்று கிண்டலடித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உன்னுடைய தவறு, என்னுடைய தவறு என்று குற்றம்சாட்டி எதையும் நான் அரசியலாக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி தைரியமாக தெரிவித்துள்ளார்.