Share via:
தென் மாவட்டங்களில் ஏற்கனவே வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சூழ்ந்த பெருவெள்ளம் தற்போதும் கூட வற்றாமல் இருந்து வருகிறது. பொது மக்கள் அனைத்து உடமைகளையும் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். தற்போது வரையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து அரசியல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த 3 மணி நேரத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் கனமழை பெய்தால் நிலைமை மேலும் மோசமடைந்துவிடுமோ என்று தென் மாவட்ட மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (டிச.22) வருகிற 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.