Share via:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமீபத்தில் பிரதமர்
மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது முன்னிலும் வேகமாக
எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூர்
மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதில் அனல் தெறித்தது.
’’தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட நம் கழகத்தில் தொண்டர்கள் தான்
பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சட்ட விதிகளை உருவாக்கினார் புரட்சித்
தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அந்த விதிகளை பின்பற்றினார்.
ஆனால் இப்பொழுது பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும், வழி
மொழியவும் வேண்டுமாம், ஐந்து ஆண்டுகள் தலைமை கழக உறுப்பினராக இருக்க வேண்டுமாம். இதனால்
சாமானிய தொண்டன் எவ்வாறு தேர்தலில் போட்டியிட முடியும் வேலுமணி தங்கமணி வீரமணி தான்
போட்டியிட முடியும்.
பொதுச் செயலாளர் பதவியில் தொண்டர்களும் போட்டியிடலாம் என புரட்சித்
தலைவர் தொண்டர்களுக்கு வழங்கிய உரிமைகளை பறித்து புரட்சித் தலைவருக்கும் கழக தொண்டர்களுக்கும்
நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளனர்.
ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் உரிமையை புரட்சித் தலைவருக்கு பின்னர்
35 ஆண்டுகளுக்கு பின்னர் நம் கழகத்திற்கு பெற்று தந்தவர் நம் அம்மா அவர்கள்.ஆனால் எடப்பாடியின்
சுயநலத்தால் தொடர்ந்து அனைத்து தேர்தல்கலிலும் தோல்வி தான் அடைந்தோம். அம்மா அவர்களின்
ஆட்சியையும் பறிகொடுத்தோம்.
கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என நம் அம்மாவிற்கு உண்மைத்
தொண்டர்கள் இணைந்து வழங்கிய நிரந்தர பதவியை எடப்பாடி பழனிச்சாமியின் கல்நெஞ்ச கூட்டம்
பறித்து விட்டது.
1989 தேர்தலில் அம்மா அவர்கள் சேவல் சின்னத்தின் தனியாக நின்று
ஐந்து தொகுதிகளில் வென்ற ஈரோடு மாவட்டத்திலேயே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோற்றோம்.
அண்ணா திமுக வரலாற்றில் புரட்சித் தலைவர் காலத்திலோ, புரட்சித்
தலைவி அம்மாவின் காலத்திலோ நாம் தொடந்து தோல்வியை தழுவியதில்லை, ஆனால் இவரது தலைமையில்
தொடர்ந்து பல தேர்தல்களில் தோல்வி மட்டும் தான் கண்டிருக்கிறது நம் கழகம். எடப்பாடி
தலைமையிலான அணி ஒரு நயவஞ்சக கூட்டம். அது அணி இல்லை அது கழகத்திற்கு ஏற்பட்ட பிணி.
நான் கட்சிக்கு உழைத்தேன் தியாகம் செய்தேன் என்று அவரால் சொல்ல
முடியவில்லை சொலவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் தான் தவழ்ந்து தவழ்ந்து தான் பதவியை பெற்றுக்
கொண்டேன் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதயதெய்வம் அம்மா அவர்களால்
இரண்டு முறை முதலமைச்சராக ஆக்கப்பட்டவன் நான். அம்மா அவர்கள் எனக்கு அதிமுக
பொருளாளராக தொடந்து அதிக வருடம் பதிவியை தந்து அழகு பார்த்தார்.
அப்படிப்பட்ட என்னை என்னை
திமுகவின் கூட்டாளி என எடப்பாடி சொல்வது மிகுத நகைப்புக்கு உரியதாக உள்ளது. சாதாரண
தொண்டானாக இருந்த என்னை உச்ச பட்ச பொறுப்புகளில் வைத்து அழகு பார்த்தது இதயதெய்வம் அம்மாவும் இந்த கழகமும். இறுதி
வரை இந்த கழகத்தின் அடிப்படை தொண்டனாகவும் அம்மாவின் உண்மை விசுவாசியாகவும் இருப்பதே
எனக்கு பெருமை. உரிமையை மீட்டு எடுக்க தான்
நாங்கள் இந்த குழுவை உருவாக்கி தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கழக பொறுப்பாளர்கள் மற்றும்
நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் பூத் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என்பதற்காகவே
உங்களை எல்லாம் தேடி வந்துள்ளோம். முழுமையாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.அடுத்த
பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் முன்னர் அந்த இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற
தேர்தலில் நாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்…’’என்று பேசி பரபரப்பை
உருவாக்கியிருக்கிறார்.
எடப்பாடியை ஓபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு தொண்டர்கள் மத்தியில்
செம வரவேற்பு கிடைத்துவருகிறதாம்.