Share via:
சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால செயல்பாட்டு மையத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். பலர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கால மையத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மை செயலாளர் அமுதா, பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஏ.ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.