Share via:
மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூட்டளவு மழைவெள்ள நீரில் நடந்து சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மூட்டளவு மழை வெள்ளநீரில் நடந்து சென்று சேதங்களை பார்வையிட்டார்.
அந்த வகையில் முத்தாலம்மன் காலனி மற்றும் ஸ்டேட் பாங்க் காலனி மக்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். மூட்டளவு தண்ணீரில் நடந்து சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கள ஆய்வு மேற்கொண்டது தி.மு.க. தலைமையையும், மக்களையும் உற்சாகமடைய செய்துள்ளது. மேலும் விரைவில் தமிழக அரசு, தென் மாவட்டங்களில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.