Share via:
வட மாநிலங்களில் வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளுக்கு நேரில்
சென்று ஆறுதல் கூறும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு மட்டும் இதுவரை வருகை
தந்ததே இல்லை. எடப்பாடி ஆட்சி நடந்தபோதும் தற்போது மிக்ஜாம் புயலுக்கு சென்னை கடுமையாக
பாதிக்கப்பட்ட நேரத்திலும், நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்ட போதும் மோடி எட்டிப் பார்க்கவில்லை.
பிரதமர் நேரில் பார்வையிட்டால் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதால் அவரை பார்வையிடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து பேசுவதற்கு நேற்று பகல் 12 மணிக்கு டெல்லியில் நேரம்
ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த மாற்றத்தினால் இரவு 10:30 மணிக்கு சந்தித்துப் பேசினார்.
மோடியை சந்தித்த நேரத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்
நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்டார். மேலும், தற்போது மழை
வெள்ளத்தால் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட
பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோரினார். மேலும் மத்திய குழுவையும் அந்த
4 மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக 2000 கோடி ரூபாய் அவசர கால ஒதுக்கீடு நிதி கோரிக்கை
வைத்த ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேரடி அழைப்பு விடுத்ததாகத் தெரியவில்லை. மத்திய
குழுவை அனுப்பிவைக்கவே கோரிக்கை வைத்திருக்கிறார்.
செந்தில்பாலாஜி விவகாரம், பொன்முடி விவகாரம் குறித்து சமாதானப்
பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், வெள்ளப் பாதிப்பு தவிர வேறு எந்த
கோரிக்கையும் வைக்கப்படவில்லையாம். சென்னையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து
பேசியிருக்கிறார். அதேபோல், வானிலை ஆய்வு மையம் தெளிவான தகவல் தரவில்லை என்றும் அறிக்கை
கொடுத்திருக்கிறாராம். இவை தவிர, வேறு அரசியல் எதுவும் பேசப்படவில்லை. .