Share via:
அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்று தி.மு.க.வினர் தலைகீழாக நின்றும் முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் சூழல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு தி.மு.க.வினர் அரண்டு போயிருக்கிறார்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கு தானாக மு9ன்வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கில் 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிட்டனர்.
இதையடுத்து இன்று நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், ‘கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21-ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும். பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது’ என்று தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் வெளியானதுமே அமைச்சர் பொன்முடி காரில் இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டது. பொன்முடி மேல் முறையீடு செய்வதற்கு ஏற்ப தீர்ப்பு வருமா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், தி.மு.க. வட்டாரமே திகிலில் உறைந்து போயிருக்கிறது.
அதேநேரம், தி.மு.க.வில் ஒரு குரூப் ரொம்பவே குஷியாகியுள்ளது. தொண்டர்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல் ஆட்டம் போட்ட பொன்முடிக்கு இது தேவைதான் என்று கூறுகிறார்கள்.
ஸ்டாலின் டெல்லி, தூத்துக்குடி போய் திரும்புவதற்குள் தி.மு.க.வில் புதுப்புது மாற்றங்கள் நடந்துவிடும் போலிருக்கிறதே…