Share via:
டெல்லி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட அதிகளவில் மழை பெய்ததாகவும், அரசின் நடவடிக்கையால் மழை வெள்ள பாதிப்பு குறைந்ததாகவும் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சேதங்களை சரி செய்வதற்காக இடைக்கால நிதியாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் தேவை என்று மத்திய அரசிடம், தமிழக அரசு முறையிட்டிருந்தது.
இது குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.18) விமானம் மூலம் டெல்லி பயணமானார்.
இன்று பேராசிரியர் க.அன்பழகன் பிறந்ததினத்தை முன்னிட்டு புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரை புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வரவேற்றார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களின் ஒருவன் நூலின் ஆங்கிலப்பதிப்பை வழங்கினார். இந்த சந்திப்பின் போது எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘கடந்த 4ம் தேதியன்று சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரியளவிலான சேதங்கள் தடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
தற்போது போக்குவரத்து சீர் செய்யப்பட்டதோடு 95 சதவீத மின் இணைப்புகள் 3 நாட்களுக்கு சரி செய்யப்பட்டதாக தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பார்வையிட்ட நிலையில், உடனடியாக 5,060 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.450 கோடியை ஒதுக்கியது.
இந்நிலையில் மத்திய குழுவிடம் தற்போது தற்காலிக நிதியாக ரூ.7,033 கோடியும், நிரந்தர தீர்வு பணிகளுக்காக ரூ.12,560 கோடியும் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.