Share via:
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் பகுதிகளை பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மிக்ஜாம் பெருமழையின் போது மழைநீருடன் சேர்த்து எண்ணெய்யும் கசிந்து எண்ணூர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 வாரங்களுக்கு மேலாகியும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எண்ணூர், எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர், தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளிலும் இந்த எண்ணெய் கசிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்திள்ளது.
மழைநீருடன் வீடுகளுக்குள் புகுந்த எண்ணெய் படலத்தால் வீட்டில் இருந்து பொருட்கள் மற்றும் படகுகள், மீன் வலைகள் உள்ளிட்டவை நாசமாகி அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எண்ணெய் கசிவுகளை நீக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 8 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (டிச.22) எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரான சவுமியா அன்புமணி காலை 9 மணியளிவல் நேரில் சென்று பார்வையிட்டார். சிவன்படை குப்பம், கமலம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் கசிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களிடம் சவுமியா அன்புமணி கேட்டறிந்தார். சவுமியா அன்புமணியுடன், பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.