Share via:
மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான்.
அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 மற்றும் 28வது பகுதி பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் பொது மக்கள் அளித்த மனுக்களை ஏற்றுக் கொண்ட வகையில் அதற்கான ஒப்புகை சீட்டுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களிடம் நேரடியாக வழங்கினார்.
இத்திட்டம் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்கள் அளித்த மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு பெற்றுள்ளதால், மனுக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்விழாவை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான மைதானத்திற்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அங்கு மாநகராட்சி சார்பில் 47 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டி வைக்கிறார். இது ரூ.131.21 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.