Share via:
நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் பா.ஜ.க.
கூட்டணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 25 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி
உருவாக்கியிருக்கின்றன. இத்தனை கட்சிகள் சேர்ந்தும் மோடியை வீழ்த்துவது சிரமம் என்பதையே
சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன.
‛மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‛இந்தியா
டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் 35,801 பேரிடம்
கருத்து கேட்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. தனித்து 304 தொகுதிகளும்
காங்கிரஸ் கட்சி தனித்து 71 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியும் கேரளாவில் கம்யூனிஸ்ட்
கூட்டணியும் முழு வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க தலைமையிலான கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தலில் 53% பெற்றிருந்தது என்றும் ஆனால், இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 6% குறைந்து
47% வாக்குகளைப் பெறும் என்றாலும் எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு
ஒரு தொகுதியும் கிடைக்காது என்று சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க.
கூட்டணி குறித்து மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் இந்த
போட்டிக்கே தகுதி பெறவில்லை என்று கழட்டிவிட்டுள்ளனர்.
அதேநேரம், முக்கியமான சில மாநிலங்களில் எத்தனை சீட் கிடைக்கும்
என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் மோடியின் தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி 70 தொகுதிகளியும்,
சமாஜ்வாடி கட்சி 7 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி 1 இடமும் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மேற்கு வங்கத்திலுள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் திரிணாமுல்
காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும் தேசிய ஜனநாயக கூட்டணி க்கு 19 இடங்களும்
கிடைக்கும் என தெரிகிறது. இங்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்க
வாய்ப்பில்லையாம்.
பீகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் மோடி + நிதிஷ்குமார் கூட்டணி
32 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளையும் பெறும் என்கிறது.
சமீபத்தில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ள கர்நாடகாவிலும்
காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதன்படி,
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும்
என தெரியவந்துள்ளது.
தெலங்கானாவில் இந்தியா கூட்டணிக்கு 10 இடங்களூம் பா.ஜ.க. கூடணிக்கு
3 இடங்களும் கிடைக்கிறது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணியே
வெல்லும் என்கிறது கருத்துக்கணிப்பு.
இன்னும் எத்தனை கருத்துக்கணிப்புகள்
வெளியாகின்றன என்று பார்க்கலாம்