Share via:
வெள்ள பாதிப்புகள் தொடர்பான நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதன்படி கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பெரும் சேதத்தை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொண்டது.
இந்நிலையில் தற்போது தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்டு தீவாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச நேரம் கோரியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணநிதி வழங்கிட வலியுறுத்தியும் பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின இன்று (டிச.18) இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்ல உள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.