Share via:
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில்
காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் தோல்விக்குக்
காரணம் கூட்டணி வைக்க முடியாமல் போனதுதான் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இண்டியா
கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட தொகுதிகளைக் கொடுப்பதற்கு காங்கிரஸ்
முன்வரவில்லை. அதனாலே இந்த தோல்வி என்று தெரியவந்துள்ளது.
ஆகவே, இனி மாநிலத் தேர்தல் மற்றும் மத்திய தேர்தலில் அனைத்து
கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் தீவிரம்
காட்டும் முடிவுக்கு காங்கிரஸ் முன்வந்துள்ளது.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப்
பின்னரே தேர்வு செய்யப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மோடியை
பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது போன்று இந்தியா கூட்டணியும் யாரையேனும்
முன்னிறுத்த வேண்டும். பிரதமர் யார் என்று கூறாமல் தேர்தலை சந்திப்பது தோல்விக்கே வழி
வகுக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் ராகுல் காந்திக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
அதனால், இந்தியா கூட்டணிக்கு ஒரு வேட்பாளரை தேர்வு செய்வதற்கும்
காங்கிரஸ் முன்வந்துள்ளது. ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதற்கு மம்தா உள்ளிட்ட
சில கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு காட்டுவதால் இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்பதில்
இருந்து ஒதுங்கிக்கொள்வதற்கு ராகுல் தயாராகிவிட்டாராம். எனவே கம்யூனிஸ்ட் அல்லது மாநிலக்
கட்சிகளில் இருந்து ஒருவரை தேர்வு செய்வதற்கும் காங்கிரஸ் முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தோழமைக் கட்சிகளுக்கு கேட்கும் இடங்களைக் கொடுப்பது மற்றும்
பிரதமர் வேட்பாளர் யார் என்றும் முடிவு செய்வது குறித்து இம்மாதம் நடக்கும் ஆலோசனைக்
கூட்டத்தில் பேசுவதற்கு காங்கிரஸ் முன்வந்துள்ளது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்
என்பதை துறப்பதற்கு தயாராகியிருப்பது இந்தியா கூட்டணிக் கட்சியினருக்கு புதிய உத்வேகம்
அளித்திருக்கிறது.
நிதிஷ்குமார், மம்தா, ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில்தான் பிரதமர்
வேட்பாளருக்கு போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டாலினை தேர்வு செய்வதற்கு ராகுல்
ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தியா கூட்டணிக்கு மேலும் ஆதரவு திரட்டும்
வகையில் சில மாநிலங்களில் மட்டும் ராகுல் இரண்டாவது பாத யாத்திரை நடத்துவதற்கும் முடிவு
எடுத்திருப்பது கட்சியினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.