Share via:
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள செம்மொழி பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த போது இத்திட்டத்தை கைவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கோவையில் செம்மொழி பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள செம்மொழி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார். தாவரவியல் தோட்டம் அடிப்படையாகக் கொண்டு இந்த செம்மொழி பூங்காவானது பொது மக்கள் இயற்கை அறிந்து கொள்ளவும், அரிய வகை தாவர இனங்களை பாதுகாக்கும் வகையில் அமைய உள்ளது. நடைபாதை, கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளுடன் உலகத்தரத்திலான செம்மொழி பூங்கா கோவைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அமைய உள்ளது.
2வது கட்டமாக 120 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைய உள்ளது. ஆக மொத்தம் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.