Share via:
சென்னை புதுப்பேட்டையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நிவாரணத் தொகைக்கான டோக்கன்களை வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்து அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியது. வீட்டு உபயோகப் பொருட்கள், பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணத் தொகை¬யாக ரேஷன் கடைகளில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்வதற்கான நாள் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் அந்தந்த பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பல இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு டோக்கன்களை வழங்க சென்ற போது பொது மக்கள் முண்டியத்துக் கொண்டு டோக்கன் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கவிடாமல் கும்பல் சூழ்ந்து கொண்டு டோக்கன்களை அவசர அவசரமாக பெய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுப்பேட்டையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்ற பொது மக்கள் ரேஷன் கடை ஊழியர்களை அந்தந்த பகுதிகளுக்கு செல்லவிடாமல் வரிசையில் நின்று டோக்கன்களை வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரேஷன் ஊழியர்களை வீடுகளுக்கு வரவிடாமல் அவசரமாக பொது மக்கள் ரேஷன் கடைகளுக்கே நேரில் சென்று டோக்கன் வாங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.