Share via:
எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை அமைச்சர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் கச்சா எண்ணெய் படலம் பரவியது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவுகள் படிந்து நாசமானது. மேலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தநிலையில் அதனுடன் சேர்த்து எண்ணெய் படலமும் வீடுகளின் சுவர்கள் மற்றும் உடமைகளில் படிந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
கடலில் மீன்கள் செத்து படித்து மிதந்ததால் இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக வழக்காக எடுத்து விசாரித்து வரும் நிலையில், எண்ணெய் படலத்தை அகற்றும் பணி, அதிநவீன எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டதில், மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்துதான் எண்ணெய் வெளியேறியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி எண்ணூர் முகத்துவாரத்தில் படிந்துள்ள கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, எம்.பி.கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.