Share via:
விஜயகாந்த் நலம் பெற்று திரும்பியதுமே அவசரம் அவசரமாக திருவேற்காட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா இப்போது தே.மு.தி.க.வின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் ஆக்டிவாக இருந்த 2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களில் தே.மு.தி.க. திகுதிகுவென வளர்ச்சியடைந்தது. 2016ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டு மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு விஜயகாந்த் உடல்நிலை முற்றிலும் சீர்குலைந்து போனது.
கடந்த 2018ல் தே.மு.தி.க. பொருளாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டார். இதன் பிறகான கட்சியின் அத்தனை முக்கிய முடிவுகளையும் பிரேமலதாவே எடுத்து வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 தேர்தலிலும் கூட்டணி முடிவு செய்வதில் தோற்றுப்போனார். எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் இடம் பிடிக்க முடியாமல் தினகரனுடன் கூட்டு சேர்ந்து மோசமான தோல்வியைத் தழுவினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு எங்கேயும் வரவேற்பு இல்லை என்பதே உண்மை. தி.மு.க. நல்ல பலமான கூட்டணியாக இருக்கிறது. எடப்பாடி தலைமையில் ஒரு கூட்டணியும் பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் உருவாகும் வாய்ப்பு தென்படுகிறது. ஆகவே, அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே பிரேமலதா தேர்வும் செயல்பாடும் இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பேசிய தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர், ‘’விஜயகாந்த் அவர்கள் முகத்துக்காக மட்டுமே இன்னமும் கட்சியில் இருக்கிறோம். இப்போது புதிய தலைவராக மாறியிருக்கும் பிரேமலதாவை யாரும் எளிதாக சந்தித்துப் பேச முடியாது, தங்கள் கருத்தை சொல்ல முடியாது அவர் சொன்னதை மட்டுமே மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பார். எந்த வெற்றியும் பெறாமலே தன்னை குட்டி ஜெயலலிதாவாக நினைத்துக்கொள்கிறார். கேப்டன் பிரசாரத்துக்கு வரவில்லை என்றால் ஓட்டு வாங்கமுடியாது. அதற்காக கேப்டனை இந்த நிலையில் ஒரு காட்சிப் பொருளாக வைத்து தேர்தல் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’’ என்று வருந்தினார்.
தே.மு.தி.க. இல்லாமல் 2024 தேர்தல் கூட்டணியை எந்தக் கட்சியும் முடிவு செய்யமுடியாது என்று வீரவசனம் பேசியிருக்கும் பிரேமலதா என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.